Monday, 19 May 2014

‪#‎மனிதம்_பரிணாமப்பிழை‬


"நல்லவன்" என்பதற்கு சில ஆதாரங்கள் தேவைப்படுகிறது.
"கெட்டவன்" என்பதற்கும் சில அடையாளங்கள் உள்ளது.
'மனிதன்' என்பவன் தான் எந்த அடையாளமும், ஆதாரமும்
இல்லாமல் எங்கோ தொலைந்து போய்விட்டான்.

‪#‎மனிதநேயம்‬'ன்ற வார்த்தை மனிதனிடம் நேரடியாக
புழங்குவது உண்மையில் ‪#‎ஓர்_அர்த்தப்பிழை‬


Thursday, 27 March 2014

பாட்டில் குடிநீர் - நமது அடுத்த தலைமுறையை காப்போம்

பாட்டில் குடிநீரைக் குறைப்போம் - மனித இனத்தை காப்போம்


உலகிலேயே  முதன்முறையாக சான் பிரான்சிஸ்கோ மாநகராட்சி, பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரை 100% தடை செய்துள்ளது. இது முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆமாம், அதாவது உலகின் பெருவாரியான கிட்னி சிறுநீரக தொடர்பான அத்தனை பிரச்சனைகளுக்கும், மிக முக்கிய காரணங்கள்   பதப்படுத்தப்பட்ட / குளோரின் கலந்த பாட்டில் குடிநீர்களே!! இது பெருவாரியான நாடுகளுக்கும் அதை ஆளும் அரசுகளுக்கும் நன்றாக தெரிந்திருந்தாலும், கொக்ககோலா, பெப்சி போன்ற பெரும்பணக்கார முதலாளிகளின் பணத்திற்காக  நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை அடமானம் வைக்கிறது. அதை பற்றி எனக்கு தெரிந்ததை சிறு கட்டுரையாக கீழே பார்ப்போம்.
18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பாட்டில் குடிநீர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், 20ஆம் நூற்றாண்டான 80களிலேயே  பரவலாக பாட்டில் குடிநீர் அறிமுகமானது. உலகில் அதிகமாக சந்தைப் படுத்தப்படும் பொருட்களில் நீரும் ஒன்று!! உலகம் முழுக்க ஆண்டிற்கு 20,000 கோடி பாட்டில்கள் விற்கப்பட்டு, அதன்மூலம் சுமார் RS. 4 லட்சம் கொடி ரூபாய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பாட்டில் குடிநீர் வர்த்தகம் உலகம் முழுதும் நடக்கிறது. அதில் சராசரியாக 15% அமெரிக்காவில் மட்டும் நடைபெறுகிறது. அந்த குடிநீர் பாட்டில்கள் கீழ்கண்ட வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. Artesian water, Fluoridated Water, Ground water,  Mineral water, Purified water, Sparkling water, Spring water, Sterile water, Well water.

உண்மையில் பாட்டில் குடிநீரை உற்பத்தி செய்யும் MNC பன்னாட்டு நிறுவனங்கள் பிற நாட்டின் மண்ணின் நீர் அளவை பெரிதாக கருத்தில் கொள்வதில்லை. முடிந்தவரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான பன்னாட்டு பாட்டில் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

அவற்றிற்கு பிறநாட்டு நிலத்தடி நீர்மட்டம் குறித்தான அக்கறை தேவையற்றதாக இருப்பதால், இந்த தொழிலே ஒரு ஆரோக்கியமற்ற தொழிலாகவே காணவேண்டியுள்ளது. அதாவது ஒவ்வொரு நாட்டிற்கும் சீதோஷ்ண நிலைப்படி தண்ணீரின் தரமும், அளவும் இருக்கும். அதில் தென்னிந்தியா போன்ற அதிக நீர்வரத்துள்ள பகுதிகளில் இதுபோன்ற ஆழ்துளை போர்கள் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் போது அந்த சுற்றுவட்டாரத்தின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். சென்னையின் ஒருபகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்ல இந்த பாட்டில் குடிநீர் உற்பத்தி காரணம் என ஆய்வுகளும் சொல்கிறது. இந்த நிலத்தடி நீர்மட்டம் குறைவு நேரடியாக விவசாயத்தை பாதித்தாலும், மறைமுகமாக மண்ணின் ஆரோக்கியத்தை அறவே அழித்துவிடுகிறது.

இது வளர்ந்த நாடுகளை சார்ந்த பாட்டில் குடிநீர் தயாரிப்பு கம்பெனிக்கு தற்காலிக லாபமாகவும், அவர்கள் சார்ந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கரன்சி மதிப்பு உயர்வுக்கு காரணமாக இருந்தாலும் பின்னாளில் மனித இனம் ஆரோக்கியமில்லாத குடிநீரை குடிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு இட்டு செல்லும் என்பது உறுதி. பணம் பொருளாதாரம், வர்த்தகம், தொழில் நாடு, எல்லாவற்றையும் விடு ஒவ்வொரு மனிதனின் அடிப்படை தேவைகள் என்பதுவே உலகில் மிக முக்கியமான ஒன்று அதில் எவர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த மனித இனமும் பலிகடா ஆக வேண்டியது விதி. 

மேலும் தொடர்ந்து இயற்கை கொள்கைகளுக்கு முரண்படுவது மனிதனின் உடல் ஆரோக்கியம் ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கும். கெமிக்கல் கலப்பினாலான குடிநீர் மனித இனத்தின் அடுத்தடுத்த சந்ததியினரை பலவீனமாக்கும்.

*மனித மரபணுவின் வயது சுமார் 2 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது மனித இனம் பூமியில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளாக முன்பிருந்து தொடர்ந்து இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. சம்மந்தம் இருக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்த மனித மரபணுவின் ஆரோக்கியம் கடந்த சில நூற்றாண்டுகளாக இல்லை. அதற்கு காரணம் முன்பு நிறைய குழந்தைகள் பிறந்தது அதாவது ஒரு ஆண்-பெண் X-Y இணைந்து பெற்றுக்கொள்ளும் 5 அல்லது 7குழந்தைகளில் குறைந்தது  1 (அ) 2 குழந்தைகள் மரபணு ரீதியாக முழு ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் சமீபத்தில் பெரும்பாலான தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்தி கொள்வதால், சராசரி மனித மரபணுவின் முழு ஆரோக்கியம் பெருவாரியாக தடைபட்டுவிட்டது. இதனால் தான் உலகமுழுக்க மருத்துவமனைகள் கூடிக்கொண்டே இருக்கிறது. இது கண்ணுக்கு தெரியாத ஆபத்து. ஆனால் அதற்கும் பாட்டில் தண்ணீருக்கும் என்ன சம்மந்தம்னு யோசிக்கிறீங்களா?!? இருக்கு! அதாவது ஏற்கனவே ஒருபுறம் மரபணு ரீதியாக மனித இனம் பலவீனமடைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் இயற்கை நீரை உறிஞ்சி எடுத்து அதில் செயற்கை வேதிப்பொருட்களை கலந்து அருந்துவது, அடுத்தடுத்த தலைமுறையை மிகப்பெரிய நோயாளிக் கூட்டமாக மாற்றிவிடும். 

ஆகையால் இப்போதே விழிப்புணர்வு கொண்டு நமது அரசு நிறுத்தாவிட்டாலும், குறைந்தபட்சம் கவுரவத்திற்காக பாட்டில் நீரை குடிக்கும் நாம், இனி அதை குடிக்காமல், இயற்கையான சுனை நீர் அல்லது கிணறு, போர் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரை குடிப்போம். நமது அடுத்த தலைமுறையை காப்போம்

#ஆருத்ரன்^

கட்டுரை தொடர்புடைய இணைப்புகள்:
http://en.wikipedia.org/wiki/Y-chromosomal_Adam
http://en.wikipedia.org/wiki/Bottled_water
http://www.ehow.com/about_5242430_history-water-bottles.html
http://www.mnn.com/food/healthy-eating/stories/5-reasons-not-to-drink-bottled-water
http://www.evolvingwellness.com/essay/bottled-water-not-worth-the-price-or-your-health
http://www.eawater.com/expo/indian-water-industry.php
http://articles.mercola.com/sites/articles/archive/2011/01/15/dangers-of-drinking-water-from-a-plastic-bottle.aspx
http://beachchairscientist.com/infographics/

Tuesday, 25 March 2014

உனக்காய் கவிஞனானேன்

உனக்காய் கவிஞனானேன்
=======================

சொற் கவிதை சூடும் கண்கள் கொண்டாய்
இக் காதலுடன் கொடூம் பெண்கள் கண்டாய் 
உன் கவிஞன் உயிரெடுத்து எங்கே சென்றாய்!

#ஆருத்ரன்^



Saturday, 22 February 2014

சொந்தங்கள் இருந்தும் அகதிகள் - நாங்கள்

சொந்தங்கள் இருந்தும் அகதிகள் - நாங்கள் 

நாங்கள் அகதிகள் - 2

வன யுத்தப் பாண்டியம் தோற்றிட
சன சத்தம் தாண்டிய வெற்றிடம் அகழ்கிறோம்
மன மொத்தம் வேண்டிய நற்றிடத் தமிழ்மண்
பிண இரத்தம் தோன்றியும் சுதந்திரம் பெற்றிடா
ரண சித்தம், மொத்தமும் சுத்தமிழந்து நாறிடும்
பண த்திற்கென வேறிடம் புகுந்த அகதிகள் - நாங்கள்

நாங்கள் அகதிகள் - 1

மக்கள் சோலையில் தான் பிறந்தோம் - ஏனோ அன்னியம்!
இடுகாட்டில் மலரும் பூக்களுக்கும் வாசமுண்டு; என்பதை
மனிதநேயம் துறந்த மனித குலம் மறந்து போனதால்
மறுத்தே போனது நெஞ்சம், உடலும் வருந்திக் கொள்ள
அறுத்தே போனது உயிரும் - இங்கு மெல்ல!! 

Saturday, 15 February 2014

உன்னால் நான் படைப்பாளி!!



உன்னுடனான,

காதல் கயமைகளில்
கவிமை இலக்கண நோயுற்றேன்;

ஆடை அணிகளில்
வண்ணம் ஓவியம் சேயுற்றேன்;

ஊடல் உரசல்களில்
கற்களை உளித்து புது தாயுற்றேன்;

ஓரிரு கிறுக்கல்கள் கவிதையாவதும்,
சிற்சில பெருக்கல்கள் ஒவியமாவதும்,
பற்பல உடைப்புகள் சிலையாவதும்;

யாதெனில்,
நிலையேயான  கலையாதொரு 
கலையேயான கவிப்பெண்ணை கண்டால்
சிலையோவென கண்ணை மீண்டால்
அலையோவென அள்ளி தெளிக்கிறது
மேற்சொன்ன மூன்றை!! 

-ஆருத்ரன்^

Wednesday, 22 January 2014

பேதங்கள் தடுக்கும் "காதல்"

பேதங்கள் தடுக்கும் "காதல்"

வானம் மீதேறும் 
வண்ண தேர்தோறும்
சின்ன குறும்புகள்
கண்ணஞ் சிவந்திட 
எண்ண குளம்புகள் 
கானம் தேறிட 

பேதம் உடைந்திட
நாதம் படைத்திடும்
வாதம் குலைந்திட
நூதல் தமிழினம்

வருந்தும் சாதல் இருந்தும்
பொருந்தும் 'காதல்' மருந்தும்!!

- ஆருத்ரன்^

Wednesday, 15 January 2014

தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு!!

ஆரிய கூட்டத்தால் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு என மாற்றி விட்ட நிலையில் உண்மையை உரக்க சொல்ல வேண்டு மென்ற நோக்கில் இக்கட்டுரையை பொது அறிவு உலகம் வெளியிடுகிறது.

சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே! சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!


அறுபது ஆண்டு கதை


"இப்போது வழங்கும் "பிரபவ' தொடங்கி "விய' ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையால் தாலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன'. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)


"அறுபது ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவத னாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது'. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்-1940) மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.


கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை. இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.


இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள். புராணக் கதையின்படி கிருஷ்ண பரமாத்மா நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார் என புராணங்கள் கூறுகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை அலசிப் பார்க்க வேண்டும்.


பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக்காட்டாக மூன்றா வது ஆண்டின் பெயரான "சுக்கில' ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதி' எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு "குரோதி' இதன் பொருள் பழி வாங்குபவன் என்பதாகும். முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி' பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி' கெட்டபுத்தி என்று பொருள். இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றைக் கொண்டு வந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிலிக்கனி போல் தெரிகிறது.


ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக் கொண்டு ஆதிக்க (ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அமைதியாகப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக் கொள்ளட்டும்; சமஸ்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக் கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக் கொள்ளட்டும்.


ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் "எந்தச் சூழலிலும்' எந்த வடிவத்திலும் "எந்த முறையிலும்' எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின் மீது திணிக்க வேண்டாம்! தமிழர் மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதை எவரும் மறக்கலாகாது.


இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.


திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல் நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள. இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்' என்று விளக்கம் தந்தார்.


இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலிலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர். 


திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ் புத்தாண்டு


பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.


தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள் சில:-
1. ""தைஇத் திங்கள் தண்கயம் படியும்"" (நற்றிணை)
2. ""தைஇத் திங்கள் தண்ணிய தரினும்"" (குறுந்தொகை)
3. ""தைஇத் திங்கள் தண்கயம் போல்"" (புறநானூறு)
4. ""தைஇத் திங்கள் தண்கயம் போல"" (ஐங்குறுநூறு)
5. ""தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ"" (கலிலித்தொகை)

"தைப் பிறந்தால் வழி பிறக்கும்', "தை மழை நெய் மழை' முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.